கொரோனா தொற்று காரணமாக சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் பிரபல பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சை பெற்று வருகிறார். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 14ம் தேதி எஸ்.பி.பி-யின் உடல் நிலை கவலைக்கிடமானது. இதனால் அவருக்கு செயற்கை சுவாசத்துடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இடையில் எஸ்.பி.பி. கண் விழித்து விட்டதாக மகிழ்ச்சியான செய்தி வெளியானாலும், மீண்டும் அவருடைய உடல்நிலை கவலைக்கிடமான நிலையிலேயே உள்ளது.
இதனால் திரைத்துறையினர், ரசிகர்கள், குடும்பத்தினர் என அனைவரும் சோகத்தில் மூழ்கியுள்ள நிலையில், இயக்குநர் பாராதிராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,. எஸ்.பி.பி. பாலசுப்ரமணியம் உடல் நலம் பெற வேண்டி நாளை (20-8-2020(வியாழக்கிழமை)) மாலை 6 மணிக்கு எஸ்.பி.பி பாடலை ஒலிக்கவிட்டு ஒரு நிமிடம் கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டுமென உருக்கமாக வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை திரைத்துறையினர் பலரும் ஆதரித்து வரும் நிலையில், நடிகர் விவேக் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், வணக்கம் நான் விவேக் பேசுறேன். என் அன்பு ரசிகப்பெருமக்களே. உலகமெல்லாம் இருக்கும் இசைப்பிரியர்களே. பிரார்த்தனை என்பது மிகவும் சக்தி வாய்ந்தது. அதுவும் உலகத்தில் உள்ள பல கோடி ரசிகப்பெருமக்கள் ஒரே விஷயத்திற்கு வேண்டும் போது அதன் சக்தியே தனி. அதன் மூலம் பலர் மீண்டு வந்துள்ளனர். அதற்கு பல ஆதாரங்கள் இருக்கு. அதுபோல நம்ம எஸ்.பி.பி. சாருக்காக ஒரு நிமிஷம் பிரார்த்திக்கலாம். நாளை மாலை இந்திய நேரப்படி 6 மணிக்கு ஒரு நிமிடம் பிரார்த்திக்க வேண்டும். ஆயிரம் நிலவே வா என பாடியவர். ஆயிரம் பிறைகள் காண வேண்டாமா?… கேவலம் இந்த கொரோனாவுக்காக அவரை பலியாக விடக்கூடாது. எனவே ஒரு நிமிடம் அவருக்காக வேண்டுவோம் என உருக்கமாக கோரிக்கைவைத்துள்ளார்.