மாலா ஒரு மாற்றுத்திறனாளி. நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள பஞ்ச நதிக்குளம் மேலசேத்தி கிராமத்தில் வசித்து வருகிறார். 15 ஆண்டுகளுக்கு முன்பு கணவனைப் பிரிந்து இரண்டு வயது கைக்குழந்தை பரமேஸ்வரியுடன் வாழத் தொடங்கினார். மாலாவிற்கு உறுதுணையாக இருந்த அவரது அப்பா,அம்மா இருவரும் அடுத்த சில வருடங்களில் இறந்து போனார்கள்.
அனாதரவாக விடப்பட்ட மாலா வைராக்கியத்துடன் தன் மகள் பரமேஸ்வரியை வளர்க்கிறார். கிடைத்த வேலைகளை செய்கிறார். காலம் மாறுகிறது குழந்தை பரமேஸ்வரி இப்பொழுது பன்னிரண்டாம் வகுப்பு பயிலும் மாணவி. இத்தனை ஆண்டுகளாக மாலா பட்ட கஷ்டத்திற்கு பலன் கிடைக்கிறது.
ஆம் அவரது மகள் பரமேஸ்வரி பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நாகை மாவட்டத்திலேயே முதலாவதாக வந்து தாய்க்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்-95, ஆங்கிலம்-94, கணிதம்-95, இயற்பியல்-91, வேதியியல்-95 என 600-க்கு 569 மார்க் எடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய பரமேஸ்வரி, தான் ஐந்தாம் வகுப்புவரை அரசு பள்ளியில் படித்ததாகவும், பின்பு மருதூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் ஐயா அவர்களின் உதவியினால் தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்ததாகவும், தன்னுடைய இந்த வெற்றிக்கு என் தாய் மற்றும் தலைமை ஆசிரியர் ராமலிங்கம் ஐயா அவர்களும், அவருடைய மனைவியும் தான் காரணம் என்று கூறினார்.
டாக்டர் அப்துல் கலாம் ஐயா அவர்களை ஆதர்சமாக கொண்ட பரமேஸ்வரி கலெக்டர் ஆவதுதான் தனது லட்சியம் என்று கூறியுள்ளார். மேற்படிப்பிற்காக உதவிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கிறாள் இந்த லட்சிய மாணவி.