உலக பெருந்தொற்று கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உலக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த நோயினால் உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் மாத இறுதி வரை கட்டுபாடுகள் நிறைந்த பொது முடக்கத்தை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. பெரும்பாலான நாடுகள் விமான போக்குவரத்தை தடை செய்தும், குறைவாக இயக்கியும் வருகின்றன.
இந்தியாவிலும் விமானப் போக்குவரத்து தடைச் செய்யப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை அழைத்து வருவதற்கு வந்தே பாரத் மிஷன் என்னும் திட்டத்தை மே மாதம் முதல் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவித்த சுமார் 9,39,000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இதுவரை நாடு திரும்பியுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐந்தாவது கட்டத்தில் செயல்பட்டு வரும் வந்தே பாரத் மிஷன் மூலம் சீனாவின் குவாங்சோ நகரிலிருந்து 233 இந்திய பிரஜைகளை அழைத்துக் கொண்டு விமானம் டெல்லி புறப்பட்டுள்ளது, இதில் பெரும்பாலனவர்கள் மாணவர்கள் என்று குவாங்சோவில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.