ரயில்வே துறையில் தனியார் நிறுவனங்களை அனுமதிக்க முடிவு செய்த மத்திய அரசின் அடுத்த கட்ட செயல்பாடாக, பயணிகள் ரயில்களை இயக்க தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க ரயில்வே அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பயணிகள் ரயில் போக்குவரத்தில் தனியாரை அனுமதிக்கும் ரயில்வே அமைச்சகத்தின் முதல் திட்டம் இதுவாகும். இதனடிப்படையில் நாடு முழுவதும் 109 வழித்தடங்களில் 151 தனியார் ரயில்களை இயக்க விருப்பமுள்ள தனியார் நிறுவனங்கள் விண்ணப்பிக்க ரயில்வே அமைச்சகம் கடந்த ஜூன் 1-ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
35 ஆண்டுகள் ரயில்கள் இயக்குவதற்கான கால நிர்ணயம் செய்யப்பட்டு ஏலம் விடப்பட்டது. இந்தத் திட்டத்தின் மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும். இதனையடுத்து நாட்டில் சென்னை, மும்பை, தில்லி, ஹவுரா, சண்டீகர், பாட்னா, பிரயாக்ராஜ், ஜெய்ப்பூர், செகந்திராபாத், பெங்களுரு உள்பட 11 இடங்களில் தனியார் ரயில்களுக்கான பெட்டி பராமரிப்பு பணிமனை அமைக்கப்படவுள்ளன.
109 வழித்தடங்களும் 12 தொகுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் மொத்தம் 14 ரயில்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த 12 தொகுப்புகளில் தமிழக தொகுப்பு ரயில்கள் தான் அதிக விலைக்கு (ரூ.3,221 கோடி) ஏலம் விடப்படுகிறது.
சென்னை-மதுரை, சென்னை-மும்பை, சென்னை-மங்களூர், புதுச்சேரி-செகந்திராபாத், சென்னை-கோவை, திருநெல்வேலி-சென்னை, திருநெல்வேலி-கோவை, சென்னை-திருச்சி, சென்னை-கன்னியாகுமரி, எர்ணாகுளம்-கன்னியாகுமரி, சென்னை-தில்லி, கொச்சுவேலி-கவுகாத்தி இடையே இருமார்க்கமாக மொத்தம் 24 ரயில்கள் இடம்பெற்றுள்ளன.
சென்னை தொகுப்பிற்குள் இயங்கவிருக்கும் தனியார் ரயில்களுக்காக, சென்னையில் ஒரு பிரத்யேக ரயில் பெட்டிகள் பராமரிப்பு பணிமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னையில் தனியார் ரயில்களின் பெட்டிகள் பராமரிப்புக்காக, பணிமனை அமைக்க புதிய இடத்தை வழங்கும் பணியை தெற்கு ரயில்வேக்கு ரயில்வே வாரியம் ஒப்படைத்துள்ளது.
புதிய பணிமனை அமைப்பதற்கான இடத்தை மண்டல ரயில்வே வழங்க வேண்டும் என்றும், இது தொடர்பாக அறிக்கை ஒன்றை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்குள் சமர்பிக்க வேண்டும் என்றும் ரயில்வே மண்டல தலைமையகத்துக்கு ரயில்வே வாரியம் உத்தரவிட்டுள்ளது.